×

கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில் சேதமடைந்து கிடக்கும் நீர்பாசன கட்டுமானங்கள்

*மராமத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி : கடலாடி, முதுகுளத்தூர் ஒன்றியங்களிலுள்ள கண்மாய், ஊரணிகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் மடைகள், மதகுகள், தடுப்பணைகள், கால்வாய் கட்டுமானங்கள் சேதமடைந்து கிடப்பதாலும், வரத்து கால்வாய்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதாலும் மழை காலம் துவங்கும் முன் மராமத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடலாடி ஒன்றியத்திலுள்ள 60 பஞ்சாயத்துகள், முதுகுளத்தூர் ஒன்றியத்திலுள்ள 46 பஞ்சாயத்துகளில் பொதுப்பணித் துறை கண்மாய், யூனியன் கண்மாய், ஜமீன் கண்மாய் மற்றும் தனியார் நிலக்கிழார் கண்மாய்கள் என 300க்கும் மேற்பட்ட நீர்பாசன கண்மாய்கள் உள்ளன.மழை காலங்களில் கண்மாய்களில் பெருகும் மழைநீரை பாதுகாப்பாக சேமித்து வைத்து, விவசாய பயிர்களின் பயன்பாட்டிற்காக தண்ணீர் செல்வதற்கு தேவையான மடைகள், மதகுகள், தடுப்பணைகள், வரத்து கால்வாய் இருபுறம் சிமெண்ட் கட்டுமானம் ஆகியவை அமைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான மடைகள், மதகுகள், தடுப்பணைகள் 50 முதல் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாக உள்ளன.

ஆண்டுகள் பல கடந்து விட்டதால், பாசன பயன்பாட்டிற்குரிய அந்த கட்டுமானங்கள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் மழை தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தவும், தண்ணீரை அனைத்து விவசாய நிலங்களுக்கும் பகிர்ந்து பிரித்து வழங்க முடியாமல், மழை காலங்களில் பெருக்கெடுத்து ஓடி வரும் தண்ணீர் வீணாகி கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் நமக்குநாமே திட்டம், நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்ட கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்மாய் மதகுகளிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் தேவைப்படும் அளவில் விவசாய நிலங்களிலுள்ள வரத்து கால்வாய்களின் உள்வாய்ப்பகுதியின் இருபுறம் சிமெண்ட்டிலான கட்டுமானங்கள் கட்டப்பட்டது.

இப்பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தொடர் வறட்சியின் காரணமாக சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நீர் வரத்தின்றி, கால்வாய் கட்டுமானங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும், கட்டுமானங்கள் சேதமடைந்தும் கிடக்கிறது. இதனால் மழை பெய்யும் காலங்களில் தேவையான மழை நீர் கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகளில் தேங்கினாலும் கூட, அந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதால் விவசாயம் பொய்த்து போகும் அவலம் இருக்கிறது.

நீர் பாசன கட்டுமானங்கள், வரத்து கால்வாய் இருந்தும், அவை சேதமடைந்து கிடப்பதால் பயிர்களுக்கு தண்ணீர் செல்ல வசதியின்றி, கூடுதல் பணம் செலவழித்து பம்பு செட் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலைமை உள்ளது. இதனால் வீண் செலவு ஏற்படுகிறது.ஆண்டு தோறும் குடிமராமத்து திட்டங்களின் கீழ் பொதுப்பணித் துறை கண்மாய்கள், கால்வாய்கள், யூனியன் கண்மாய், ஊரணி மற்றும் வரத்து கால்வாய்கள் புனரமைப்பு மற்றும் மராமத்து பணிகள் நடந்தாலும் கூட புதியதாக நீர்பாசனத்திற்குரிய கட்டுமானங்கள் கட்டுவது கிடையாது.

பழைய தடுப்பணை, மடைகள், மதகுகளை மட்டுமே மராமத்து செய்கின்றனர். ஆண்டுதோறும் முறையான பராமரிப்பு இல்லாததால் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து விடுகிறது. இதுபோன்று நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் மழைநீரை சேமித்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் நோக்கத்திற்காக கட்டப்படும் புதிய தடுப்பணை கட்டுமானங்கள் பெரும்பாலானவை ஓராண்டு கூட நீடிப்பது கிடையாது.

இதனை போன்று யூனியன் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடக்கும் ஊரணி, கண்மாய் மராமத்து பணிகளில் மடைகள், மதகுகள், வரத்து கால்வாய் கட்டுமானங்களை மராமத்து செய்யவோ அல்லது புதியதாக கட்டும் பணி நடக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் விவசாயம் பாதித்து வருகிறது. எனவே மழைக்காலம் துவங்கும் முன் விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில், கிராமங்களில் சேதமடைந்து கிடக்கும் பழைய தடுப்பணைகள், மடைகள், மதகுகள், சிமெண்ட்டிலான வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். தண்ணீர் ஓட்டத்தை தடுக்கும் விதமாக நீர் வரத்து கால்வாய்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில் சேதமடைந்து கிடக்கும் நீர்பாசன கட்டுமானங்கள் appeared first on Dinakaran.

Tags : Kudladi ,Mudukulathur ,Sayalkudi ,Kanmai ,Panis ,Kudadadi ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...